Thursday, July 2, 2020

கொளத்தூர் மணி தலைமையில் அன்னூரில் ஆயிரம்குடங்களுடன் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் போராட்டம் 2010




கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள நல்லிசெட்டிபாளையம்,அச்சம்பாளையம், அல்லிக்காரன்பாளையம், செங்கப்பள்ளி,குருக்கிளையாம்பாளையம் ஆகிய கிராமங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து நிலவிவருகின்றன.

அண்மைக்காலங்களில் பொதுக்குழாயில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்கத்தடை, செல்போன் பேசத் தடை, இரட்டைக்குவளைமுறை, சலூன்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிவெட்டத்தடை, அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்பட்ட பொதுச்சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டோரைப் புதைக்கத்தடை,மோட்டார்பைக் ஓட்டத்தடை என பல்வேறு தீண்டாமை வன்கொடுமைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. பெரியார் திராவிடர் கழகமும் தொடர்ந்து இவற்றுக்கு எதிராகப் போராடிவருகிறது.

கடந்த 12.06.11 அன்று மாலை 6.00 மணியளவில் அன்னூர் அருகேயுள்ள குருக்கிளையாம்பாளையம் என்ற கிராமத்தில் பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்கச்சென்ற வசந்தகுமார் என்ற மாணவனை ஆதிக்கஜாதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் தாமோதரன் என்பவரும்“சக்கிலியர்கள் இங்கு தண்ணீர் பிடிக்க வரக்கூடாது” என மிரட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர். செய்தியைக் கேள்விப்பட்ட உடனேயே மாலை 7.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்னூர் ஈஸ்வரன், ஜோதிராம் உட்பட நூற்றுக்கணக்கான தோழர்களும் பொதுமக்களும் வன்கொடுமை நடந்த குருக்கிளையாம்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டப்பொறுப்பாளர்கள் வெள்ளமடை நாகராசு,மேட்டுப்பாளையம் சந்திரசேகர், தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மற்றும் தோழமை இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் அன்னூர் காவல்நிலையத்தில் உரிய அதிகாரிகளைச் சந்தித்து தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர். அதன்பிறகு இரவு 1.00 மணிக்கு மேல்தான் எஃப்.ஐ.ஆ ரே போடப்பட்டது.

13.06.11 காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குறுக்கிளை யாம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து புகார் விண்ணப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.


தலித் மாணவனைத் தாக்கிய ஆதிக்கஜாதியினர் இன்று
வரை கைது செய்யப்படவில்லை. தண்ணீர் தடையும் நீக்கப்படவில்லை. இதுபற்றி நாளிதழ்களில் வெளியான செய்திகளை அறிந்து அதனடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இச்சிக்கலைக் கையில் எடுத்திருக்கிறது. தமிழக அரசுக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலித் சிறுவன் அவமானப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? இச்சம்பவம் குறித்து குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதா? பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதா? இதுபோன்ற தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

என்பவை உள்ளிட்ட பல கேள்விகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வினவியுள்ளது.

கடந்த 21.05.11 அன்று அன்னூரில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் அன்னூர் ஒன்றியத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அன்னூர் ஒன்றியம் முழுவதிலும் உள்ள கிராமங்களில் என்னென்ன வகையான வன்கொடுமைகள் நடைமுறையில் உள்ளன என்பவை குறித்து விளக்கமான புள்ளிவிபரங்களுடன் கூடிய துண்டறிக்கையையும் தோழர்கள் விநியோகித் தனர். அதில் குருக்கிளையாம்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்க தடை உள்ளது என்ற செய்தியையும் குறிப்பிட்டுள்ளனர்.இப்படிப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டுபிடித்துக் களைய வேண்டியது காவல்துறையின் கடமையாகும். ஆனால் பெரியார் திராவிடர் கழகம் கண்டறிந்து பட்டியல் போட்டு அதைத் துண்டறிக்கையாக விநியோகித்து ஆர்ப்பாட்டமே நடத்தியிருந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 21.05.11 ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் குருக்கிளையாம்பாளையத்தில் தலித் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தே இருக்காது.

இச்சூழலில் பெரியார் திராவிடர் கழகம் இதை முக்கியப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டுள்ளது. வரும் 27.06.11 திங்களன்று காலை 10 மணியளவில் குருக்கிளையாம்பாளையத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 1000 குடங்களுடன் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர்கள் கோவை கு.இராமக்கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் ப.பா.மோகன், நாடுகடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் பேராசிரியர் சரசுவதி ஆகியோர் உட்பட பல்வேறு தோழமை இயக்கங்களும் இந்த மனிதஉரிமைப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. அனைத்து முற்போக்குஇயக்கங்களும்,தோழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அவசியம் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

View My Stats