திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள வெட்டல் நாயக்கன்பட்டியைச் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பாலமுருகன் என்பவருக்கும் ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தைச் சார்ந்த நதியா என்பவருக்கும் காதல் திருமணத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சார்ந்த மாவட்ட செயலாளர் போஸ் (இவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்) நடத்தி வைத்துள்ளார்.
இதற்காக விடுதலை சிறுத்தைகள், புரட்சிப் பாரதம், பறையர் பேரவை அமைப்பைச் சார்ந்தவர்கள், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த போஸ் என்ற தோழரை கொடூரமாக கொலை வெறியோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன.
இதேபோன்று விழுப்புரம் கச்சிராப்பாளையம் அருகே உள்ள கரடி சித்தூரில் ஆதிதிராவிடர் பரிமளா என்பவரை (பறையர் சமூகம்) அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரை விட்டே ஓட நேர்ந்தது. தொடர்ந்து அருந்ததியர் சமூகப் பெண்கள் நான்கு பேரை மந்தையில் நிறுத்தி மானபங்கப்படுத்தி, 19 வயது வெள்ளையம்மாள் என்பவரை படுகொலை செய்ததாகவும், 17 வயது நதியாவை மனநோய்க்கு உள்ளாக்கியதாகவும் செய்திகள் வந்தன.
விழுப்புரம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளி நேயனூரை சேர்ந்த ஆதி திராவிடர் சாதிப் பெண் (பறையர்) கோகிலா என்பவரை அருந்ததியர் சாதி இளைஞன் கார்த்திகேயன் என்பவர் காதலித்து மணம் முடித்த காரணத்தால் சொந்த சாதி கோகிலாவை கவுரவப் படுகொலை செய்த தகவல் வந்தது.
தேனி சின்னமனூர் ஒன்றியம் காட்சிபுரம் பகுதியை சேர்ந்த 11 வயது அருந்ததியர் சிறுமி நந்தினியை மூன்று ஆதி திராவிடர் (பறையர்) சாதி இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி படுகொலை செய் துள்ளார்கள்.
ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஜாதி வெறியைக் கண்டித்துப் போராட வேண்டிய வர்கள், தங்களுக்கும் ‘கீழாக’ அருந்ததியரைக் கருதி அவர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்துவது ஜாதி எதிர்ப்புக் கொள்கைக்கே ஊறு விளைவிக்கும் செயல். தலித் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் ஆதிக்க ஜாதியினரின் செயலுக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
இப்படி தலித் மக்களுக்குள்ளேயே தங்களை ‘உயர்ஜாதி’ மனநிலைக்கு உள்ளாக்கிக் கொண்டு வன்முறையைக் கையில் எடுப்பவர்களை தலித் அமைப்புகளின் தலைவர்கள் ஏன் கண்டிக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்? என்று ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் எழுப்பிய கேள்வியில் முழுமையான நியாயம் இருக்கிறது என்பதே நமது உறுதியான கருத்து.
தலித் அடையாளத்துக்குள் நிறுத்தப்பட்டுள்ள பறையர், அருந்ததினருக்கு இடையே மோதல்களும், மற்றொரு பிரிவினரான ‘தேவேந்திர குல வேளாளர்’ பிரிவைச் சார்ந்த சிலர் தாங்கள் ‘தலித்’ பிரிவினரை விட உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ள விரும்புவதும், ஜாதியமைப்புக்கு வலிமை சேர்க்கும் போக்கே ஆகும். அம்பேத்கர் வாழ்நாள் முழுதும் போராடிய கொள்கைக்கு குழி பறிப்பதுமாகும்.
பார்ப்பனியத்தால் உந்தப்பட்ட ஆதிக்க ஜாதி வெறி சக்திகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் திராவிடர் விடுதலைக் கழகம், இந்த உண்மையை - அது கசப்பானதாக இருந்தாலும் வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறது. இதைக் கண்டும் காணாமல் மவுனம் காத்து, கடந்துபோக நினைப்பது, ஜாதி எதிர்ப்புக் கொள்கைக்கு நேர்மை சேர்ப்பதாகவும் ஆகாது.
இந்த உள்ஜாதி மோதல்களை தடுத்து நிறுத்த அருந்ததினருக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிக்க தலித் தலைவர்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/pm-oct15/29544-2015-11-04-08-58-27